வெசாக் தன்சல் வழங்குவோருக்கு வெளியான விசேட அறிவிப்பு!
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் இதுவரை சுமார் 15,000 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவிக்கையில், தன்சல்களை பதிவு செய்வதற்கான வாய்ப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில தொற்று நோய்கள் பரவி வரும் நிலையில், தன்சல் ஏற்பாட்டாளர்கள் உரிய சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் தோரணங்கள், வெசாக் கூடுகள் மற்றும் வெசாக் வலயங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வெசாக் பண்டிகையை கொண்டாட பௌத்த மக்கள் ஆர்வத்துடன் தயாராகி வருவதுடன், தமது வீடுகளையும் வெசாக் கூடுகள் மற்றும் அலங்காரங்களால் அலங்கரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இம்முறை வெசாக் கூடுகள் மற்றும் அலங்காரப் பொருட்களின் விலைகள் ஓரளவு அதிகரித்துள்ள போதிலும், விற்பனையில் கணிசமான வளர்ச்சி பதிவாகி வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
