போலியான சிசிடிவி அபராத குறுஞ்செய்திகள் குறித்து வாகன சாரதிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை!


சிசிடிவி கமெராக்கள் மூலம் கண்டறியப்படும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகக் கூறி, போலியான குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் மூலம் நடைபெறும் மோசடிகள் தொடர்பில் இலங்கை காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

காவல்துறை ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த போலி செய்திகள் சந்தேகத்திற்கிடமான தொலைபேசி எண்களிலிருந்து அனுப்பப்படுவதாகவும், அவை காவல்துறையினரால் அனுப்பப்பட்டவை போல தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்திகளில் உள்ள இணைப்புகளை திறக்கும் நபர்கள், போலியான இணையத்தளத்திற்கு வழிநடத்தப்படுவதாகவும், அங்கு போக்குவரத்து அபராதங்களை செலுத்துமாறு கோரப்படுவதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் அதிகாரப்பூர்வ அரச கட்டண முறைமையை ஒத்த வகையில் இந்த போலி இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம் கடன் அட்டை விவரங்கள் உள்ளிட்ட இரகசிய தகவல்கள் திருடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எனவே, குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் மூலம் வரும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை திறக்க வேண்டாம் என்றும், அவற்றை புறக்கணிக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், காவல்துறை அதிகாரப்பூர்வமாக வழங்கும் அபராத அறிவிப்பு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரச கட்டண முறையின் ஊடாக மட்டுமே போக்குவரத்து அபராதங்களை செலுத்த வேண்டும் என்றும் காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.