ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!


ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஏழு இலங்கை இளைஞர்கள் நேற்று இரவு (27) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலைச் சார்ந்த ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தம்வசம் வைத்திருந்ததுடன், அவை தொடர்பான சமூக ஊடகப் பதிவுகளுக்கு விருப்பக் குறியீடு வழங்கியதும் மற்றும் கருத்துகளை பதிவிட்டதுமாகிய காரணங்களால், இவர்கள் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அம்பலாங்கொட, மரபான, பொரளை, பண்டாரகம, பொலன்னறுவை மற்றும் வத்தளை பகுதிகளைச் சேர்ந்த 23 முதல் 33 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து, விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், அரச புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.