தெனியாயவில் பரவும் காய்ச்சல் - ஆராய விசேட குழு!
தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே வேகமாக பரவி வரும் காய்ச்சல் நிலைமையை ஆய்வு செய்து கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவைச் சேர்ந்த விசேட மருத்துவக் குழு அப்பகுதிக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுமித் மனதுங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
நோய் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொடவின் அறிவுறுத்தலின் பேரில், நேற்று (07) மற்றும் இன்று (08) ஆகிய இரு தினங்களுக்கு நான்கு பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
அவை தெனியாய மத்திய மகா வித்தியாலயம், தெனியாய ராஜபக்ச மகா வித்தியாலயம், தெனியாய புனித மத்தியூ இருமொழி வித்தியாலயம் மற்றும் பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகும். இப்பாடசாலைகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பரவி வரும் காய்ச்சலின் தன்மை மற்றும் காரணத்தை கண்டறிய கொழும்பிலிருந்து விசேட தொற்றுநோயியல் நிபுணர்கள் குழு தெனியாய பகுதிக்கு வருகை தரவுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுமித் மனதுங்க, தற்போதைய நிலைமையைப் பற்றி பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.
