பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறை வழங்க கோரிக்கை!


பெண்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறையை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை குடும்ப திட்டமிடல் சங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச மாதவிடாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, காலத்திற்கேற்ற முற்போக்கான நடவடிக்கையாக இந்த கோரிக்கையை அரசிடம் உத்தியோகபூர்வமாக முன்வைக்க உள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக குடும்ப திட்டமிடல் சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மருத்துவர் ருசித பெரேரா கருத்து தெரிவிக்கையில்,

“எமது சங்கத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறையை வழங்கும் நடைமுறை கடந்த ஆண்டே உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

மேலும், அரச நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கும் இந்த விடுமுறையை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு கோரி, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, தொழில் அமைச்சு மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரச மற்றும் தனியார் துறைகள் இரண்டிலும் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படுமானால், அது பெண்களின் நலனுக்கான முக்கிய முன்னேற்றமாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஆதரவும் பராமரிப்பும் வழங்குவது சமூகப் பொறுப்பாகும் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.