மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் புதிய கட்டப் பணிகள் இன்று ஆரம்பம்!


மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ரம்புக்கனை முதல் கலகெதர வரையிலான பகுதிக்கான நிர்மாணப் பணிகள், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று (29) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் பிரிவின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

ரம்புக்கனை முதல் கலகெதர வரையிலான பகுதி மொத்தம் 18.7 கிலோமீற்றர் நீளமுடையதாகும். இந்த நிர்மாணப் பணிகளுக்காக 112.4 பில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக, பொத்துஹெர முதல் ரம்புக்கனை வரையிலான பகுதியின் பணிகள் தற்போது வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகளுக்காக 78 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் அனைத்தும் 2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மாபெரும் நெடுஞ்சாலைத் திட்டத்தின் முக்கிய அம்சமாக, இதற்கான முழு நிதியும் உள்நாட்டு நிதி மூலங்களிலிருந்து பெறப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்பின்றி, அனைத்து நிர்மாணப் பணிகளும் இலங்கையின் உள்நாட்டு ஒப்பந்த நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பகுதி நிர்மாணம் நிறைவடைந்த பின்னர், கொழும்பிலிருந்து கண்டி மற்றும் கலகெதர பகுதிகளுக்கான பயண நேரம் குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.