இந்திய முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீனை சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீனை தமிழக முதல்வர் விஜய் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னை மண்ணடியில் அமைந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்திற்கு சென்ற முதல்வர் விஜயை, காதர் மொய்தீன் நேரில் வரவேற்றார்.

முன்னதாக, தமிழக முதல்வராக பதவியேற்ற விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாவது நாளாக காதர் மொய்தீனை சந்தித்த விஜய், “இக்கட்டான சூழலில் எனக்கு ஆதரவாக இருந்ததற்கு நன்றி. என்னை எப்போதும் நீங்கள் நம்பலாம்” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த காதர் மொய்தீன், “முதல்வர் விஜய் நாகரிக அரசியலை முன்னெடுத்து வருகிறார். முந்தைய அரசும் அதேபோன்ற அரசியலை மேற்கொண்டது” என கூறினார்.

மேலும், பள்ளிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு அருகிலுள்ள மதுக்கடைகளை மூட அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது என்றும், ஆளுநர் நிகழ்வுகளில் ‘வந்தே மாதரம்’ பாடப்படுவது இயல்பான ஒன்றே என்றும் அவர் தெரிவித்தார்.