அஸ்வெசும கொடுப்பனவில் முறைகேடு? விசாரணை செய்யுமாறு கோரிக்கை!
நலன்புரி நன்மைகள் சபை மூலம் வழங்கப்பட்ட அஸ்வெசும கொடுப்பனவில், 5,000 இலட்சம் ரூபாவிற்கு அருகிலான தொகை அதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை முன்னிட்டு ‘சுதந்திர சட்டத்தரணிகள்’ அமைப்பு அறிக்கை வெளியிட்டு, சம்பவம் குறித்து பாராளுமன்றத்தின் மூலம் உடனடி விசாரணை நடத்த வேண்டும் என கோரியுள்ளது.
சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அரச நிதி சரியான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் இன்றி பயன்படுத்தப்படுவது ஊழல் மற்றும் மோசடியாக கருதப்படலாம் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
மேலும், கீழ்க்கண்ட முக்கிய கேள்விகளுக்கு பதில் கண்டறியப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது:
- ஏப்ரல் மாதத்தில் உதவி பெற வேண்டியிருந்த சுமார் 18 இலட்சம் குடும்பங்களில் எத்தனை குடும்பங்களுக்கு இரட்டைப் பணம் அல்லது கூடுதல் தொகை வழங்கப்பட்டது?
- கேகாலை, மொனராகலை, குருநாகல் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இந்த இரட்டைக் கொடுப்பனவுகள் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளனவா?
- நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக அல்லது இரண்டு முறை பணம் பெற்ற பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை என்ன?
- இவ்வாறு அதிகமாக வழங்கப்பட்ட மொத்த நிதி அளவு எவ்வளவு?
- இந்த கொடுப்பனவை அனுமதித்த அதிகாரிகள் யார்?
- நலன்புரி நிதி நிர்வாகத்தில் அரசியல் நியமனங்களின் பங்கு என்ன?
- சம்பவம் தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்கப்பட்டுள்ளதா?
- சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நிதி அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததா? வழங்கியவர் யார்?
- திறைசேரி இந்த கூடுதல் நிதி விடுவித்தது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளதா?
இச்சம்பவம் தொழில்நுட்ப கோளாறு, நிர்வாக பிழை அல்லது திட்டமிட்ட முறைகேடு என எதனால் ஏற்பட்டது என்பதை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
