உக்ரைனின் அதிரடி தாக்குதலில் வெடித்து சிதறிய ரஷ்யா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!


ரஷ்யாவின் வெற்றி தின அணிவகுப்பிற்கு முன்னதாக, உக்ரைன் மேற்கொண்ட அதிரடி ட்ரோன் தாக்குதலில் யாரோஸ்லாவ்ல் பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தீப்பற்றி எரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவின் முக்கிய ஐந்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அந்நாட்டிற்கு பெரும் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“ஸ்லாவ்நெஃப்ட்-யானோஸ்” என அழைக்கப்படும் குறித்த சுத்திகரிப்பு நிலையத்தின் முக்கிய பகுதிகளை உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் துல்லியமாக குறிவைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

தாக்குதலைத் தொடர்ந்து பலத்த வெடிப்புகள் ஏற்பட்டதுடன், அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 700 கிலோமீற்றர் தொலைவிலிருந்து நீண்ட தூர ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

யாரோஸ்லாவ்ல் மட்டுமன்றி, கடந்த 24 மணிநேரத்தில் ரஷ்யாவின் பல முக்கிய பகுதிகளும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை நோக்கியும் ட்ரோன்கள் ஏவப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், அவை வான் பாதுகாப்பு அமைப்புகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மாஸ்கோ மேயர் தெரிவித்துள்ளார்.