ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன மர்ம மரணம்!


ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன உயிரிழந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது வீட்டில் அவர் உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் இன்று கோட்டை நீதவான் பசந் அமரசேனவிடம் தகவல்களை முன்வைத்தனர்.

அவரது மரணம் சந்தேகத்திற்கிடமாக உள்ளதால், சட்ட மருத்துவ அதிகாரியின் மரணப் பரிசோதனையும் நீதவான் விசாரணையும் அவசியம் என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதனையடுத்து, விசாரணைகளுக்காக கோட்டை நீதவான் சம்பவம் இடம்பெற்ற கொள்ளுப்பிட்டியிலுள்ள வீட்டிற்குச் சென்றுள்ளதால், நீதிமன்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், மரணம் இடம்பெற்ற இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மரணப் பரிசோதகர் ஆகியோரும் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


இரண்டு நாட்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

2013 ஆம் ஆண்டில் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான 10 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தின் போது, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றிய சந்திரசேன, 16 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற சதி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

அத்துடன், சிங்கப்பூரிலுள்ள வங்கிக் கணக்கொன்றில் 1.45 மில்லியன் யூரோ பெறப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தனது மனைவியின் பெயரில் புருனேயில் போலி நிறுவனம் ஒன்றை உருவாக்கி, அந்த இலஞ்சப் பணத்தை அதன் சிங்கப்பூர் வங்கிக் கணக்கில் வரவு வைக்க ஏற்பாடு செய்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசிய விமான நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களை வாங்கும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், கடந்த மார்ச் 12 ஆம் திகதி கபில சந்திரசேன கைது செய்யப்பட்டிருந்தார்.

அதன்பின்னர், கடந்த 5 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது.

அப்போது, சந்தேகநபரை 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபா மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளிலும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக அவரது உறவினர்கள் எனக்கூறி போலி பிணையாளர்கள் இருவர் நீதிமன்றத்தில் முன்னிலையானமை பின்னர் தெரியவந்தது.

இதனையடுத்து, அந்த இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பிணை நிபந்தனைகளின்படி, கபில சந்திரசேனவின் நெருங்கிய உறவினர்கள் மூவர் ஆள் பிணை வழங்க வேண்டியிருந்தது.

அதற்காக உறவினர்களாக முன்னிலையாக சந்தேகநபர்கள் தலா 15 ஆயிரம் ரூபா பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, பிணை நிபந்தனைகள் மீறப்பட்டதுடன் நீதிமன்றத்தின் நம்பிக்கையும் சிதைக்கப்பட்டுள்ளதாகக் கருதிய கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, 1997 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க பிணைச் சட்டத்தின் கீழ் கபில சந்திரசேனவின் பிணையை இரத்து செய்து, அவரை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நேற்று உத்தரவிட்டிருந்தார்.

மேலும், இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறு இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் பிரதான நீதவான் பணிப்புரை வழங்கியிருந்தார்.

இந்நிலையில், கபில சந்திரசேன தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.