இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் உத்தேசம்!


2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, தமக்கும் வியட்நாம் ஜனாதிபதி டோ லாமிற்கும் இடையே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல், தளவாட சேவைகள், உள்கட்டமைப்பு அபிவிருத்தி, சுற்றுலாத்துறை மற்றும் உற்பத்தித் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை ஆராயுமாறு வியட்நாமிய முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

இலங்கையின் விவசாயத் துறையை வலுப்படுத்தும் நோக்கில், 100 மெட்ரிக் தொன் யூரியா மற்றும் சூப்பர்பாஸ்பேட் உரங்களை நன்கொடையாக வழங்க வியட்நாம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

மேலும், கொழும்பு மற்றும் ஹனோய் நகரங்களுக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் இந்த ஆண்டிலேயே ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வியட்நாம் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாமுடன் இணைந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

அத்துடன், தகவல் மற்றும் தொடர்பாடல், கலாசாரம், மதம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளை மையமாகக் கொண்டு இலங்கையும் வியட்நாமும் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.