நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை : மண்சரிவு எச்சரிக்கை!


நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையின் காரணமாக, மலைப்பகுதிகளில், குறிப்பாக நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவு எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

கனமழையால் மண்சரிவுகள், கற்கல் உருண்டு விழுதல் மற்றும் மரங்கள் சாரிந்து விழுதல் அபாயம் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, மழைநீர் விரைவாக வெளியேறுவதற்கு ஏதுவாக வீடுகளைச் சுற்றியுள்ள வடிகால் அமைப்புகளைச் சுத்தம் செய்யவும், வீட்டின் மேலுள்ள கனமான மரங்களையும் அபாயகரமான பொருட்களையும் முடிந்தவரை அகற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், நிலச்சரிவின் ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் தென்பட்டால் உடனடியாக கிராம அலுவலருக்கும் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அவசரநிலை ஏற்பட்டால், முடிந்தவரை விரைவாகப் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறுவதும், சுற்றியுள்ள மக்களுக்குத் தகவல் தெரிவிப்பதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் அளிப்பதும் மிகவும் முக்கியம் என்றும்  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.