நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை!
தென்மேல் பருவக்காற்று படிப்படியாக நாட்டில் நிலைபெற்று வருவதன் காரணமாக, பல பகுதிகளில் மழையுடனான வானிலையும் ஓரளவு பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று (21) மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் வடமேல் மாகாணம் ஆகிய பகுதிகளிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையாக மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான ஓரளவு பலத்த மழை பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வட மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனுடன், ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பும் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வட, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை ஏற்படும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
