எரிபொருள் விலையை குறைக்கும் சாத்தியம் இல்லை – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
இலங்கையில் எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலைகளை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் உள்ள எரிபொருள் கையிருப்பு ஜூலை மாதம் வரை போதுமான அளவில் இருப்பதாகவும், செப்டம்பர் மாதம் வரையிலான எரிபொருள் இறக்குமதிகளுக்கான ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாகவும் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த தகவல்களை மயூர நெத்திகுமார ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய யுத்த சூழ்நிலையால் எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், வழக்கமான மாதாந்திர விலை திருத்தத்தைத் தவிர மேலதிக விலை உயர்வுகளை மேற்கொள்ளும் திட்டம் தற்போது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுடன் ஒப்பிடுகையில் உலக சந்தையில் எரிபொருள் விலையில் சற்று குறைவு காணப்பட்டாலும், மே 13ஆம் திகதி நிலவரப்படி டீசல் பேரல் ஒன்றின் விலை 154 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
யுத்தத்திற்கு முன்னர் உலக சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 63 முதல் 69 டொலர் வரை காணப்பட்ட நிலையில், தற்போது அது 110 டொலர் வரை உயர்ந்துள்ளதாகவும், அடுத்த இரண்டு மாதங்களிலும் 100 டொலருக்கு மேல் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
உலக சந்தை விலைகள் இரு மடங்காக உயர்ந்திருந்தாலும், உள்நாட்டில் அதே அளவுக்கு விலை அதிகரிக்கப்படவில்லை என்பதால், எதிர்வரும் மாதங்களில் உலக சந்தை விலை குறைந்தாலும் உள்நாட்டு விலையில் உடனடி குறைவு ஏற்படும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக அடுத்த ஒரு அல்லது இரண்டு மாதங்களில் எரிபொருள் விலையை குறைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தற்போது வழங்கப்பட்டு வரும் எரிபொருள் மானியங்களை படிப்படியாக குறைத்து, உலக சந்தை விலைகளுக்கு ஏற்ப புதிய விலை அமைப்பை நடைமுறைப்படுத்துவது குறித்து கூட்டுத்தாபனம் ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
