இறைச்சிக் கடைகள் மற்றும் மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!


2026 ஆம் ஆண்டு தேசிய வெசாக் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகள், இறைச்சிக் கடைகள், பந்தய மையங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் இரவு விடுதிகள் மூன்று நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, மே 30, மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தினங்களில் அனைத்து கால்நடை இறைச்சிக் கடைகளையும் மூடுவதுடன், பல்பொருள் அங்காடிகளில் நடைபெறும் இறைச்சி விற்பனைகளையும் இடைநிறுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பந்தய மையங்கள், சூதாட்ட விடுதிகள், மதுபானக் கடைகள் மற்றும் இரவு நேர பொழுதுபோக்கு விடுதிகளையும் குறித்த நாட்களில் முழுமையாக மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் விழாவை முன்னிட்டு, மே 27 முதல் ஜூன் 2 ஆம் திகதி வரை நாடு முழுவதும் “வெசாக் வாரம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெசாக் வாரத்தின் போது மத மற்றும் ஆன்மீக நிகழ்வுகள், சமூக சேவைகள் மற்றும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெறவுள்ளன.