டித்வா சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீடொன்றுக்காக வழங்கப்பட்ட அரசாங்க நிவாரணத் தொகையிலிருந்து இலஞ்சம் வாங்கிய இருவர் விளக்கமறியலில்!
டித்வா சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீடொன்றுக்காக வழங்கப்பட்ட அரசாங்க நிவாரணத் தொகையிலிருந்து 10 இலட்சம் ரூபாய் இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கிராம உத்தியோகத்தர் ஒருவரும் பெலவத்தை சீனி தொழிற்சாலை ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொனராகலை பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டு பணியாற்றிய கிராம உத்தியோகத்தரும், பெலவத்தை சீனி தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியரும் ஆகிய இருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சூறாவளியால் வீடு முழுமையாக சேதமடைந்த நிலையில், குறித்த நபருக்கு அரசாங்கத்தினால் 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி முதற்கட்டமாக வழங்கப்பட்ட 20 இலட்சம் ரூபாய் நிவாரணத் தொகையிலிருந்து, சந்தேக நபர்கள் 10 இலட்சம் ரூபாய் இலஞ்சமாக பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டமாக வழங்கப்படவுள்ள நிவாரணத் தொகையை விடுவிக்கவும் தலா 5 இலட்சம் ரூபாய் வீதம் மேலும் 10 இலட்சம் ரூபாய் இலஞ்சமாக கோரியிருந்ததாகவும் விசாரணைகளில் வெளிச்சம் பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
