மட்டக்களப்பில் விடுதியில் பலியான சிறுவர்கள்! விசாரணைகளில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்!


மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அவர்களின் தந்தை எனக் கூறப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், விசாரணைகளில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் தாய்க்கு புற்றுநோய் இருப்பதாகக் கூறி, போலி அடையாள அட்டையை பயன்படுத்தி குழந்தைகளுடன் யாசகம் செய்து மோசடியில் ஈடுபட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புற்றுநோய்க்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட தாயை பார்வையிடுவதற்காக, இரண்டு குழந்தைகளும் தந்தையுடன் பதுளையிலிருந்து மட்டக்களப்புக்கு சென்றிருந்தனர்.

அவர்கள் தங்கியிருந்த விடுதியில் ஏற்பட்ட தீப்பரவலில், 3 வயது ஆண் குழந்தையும் 5 வயது பெண் குழந்தையும் கடந்த புதன்கிழமை மூச்சுத்திணறலால் உயிரிழந்தனர்.

சம்பவத்திற்குப் பின்னர், சந்தேகநபர் பயன்படுத்திய அடையாள அட்டையை பரிசோதித்த போது, அது வேறு ஒருவருக்குச் சொந்தமானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அந்த அடையாள அட்டையின் உண்மையான உரிமையாளர் பதுளையைச் சேர்ந்தவர் என்றும், அவரது அடையாள அட்டை 2023 ஆம் ஆண்டு காணாமல் போனதாகவும், பின்னர் புதிய அடையாள அட்டை பெற்றுக்கொண்டு தற்போது கடவத்தையில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அடையாள அட்டையை தன்னுடையது எனக் கூறி, அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் பல மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் பொய்யானது என்றும், அவரது மனைவி தற்போது மாத்தறையில் உள்ள வீட்டில் வசித்து வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர், மனைவிக்கு புற்றுநோய் இருப்பதாக கூறி பல இடங்களில் யாசகம் செய்து வந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அத்துருகிரிய, சப்புகஸ்கந்த, அநுராதபுரம் மற்றும் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இவருக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த சந்தேகநபர் நேற்று (28) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், அவரது தாயாரையும் விசாரணைக்காக அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.