சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் உள்ள மேலும் 89 குற்றவாளிகளை நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை!
இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டு, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள மேலும் 89 குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் மற்றும் ஷார்ஜா பகுதிகளில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 குற்றவாளிகள், நேற்று (27) இரவு புலனாய்வுப் பிரிவின் விசேட நடவடிக்கையின் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்களில் மூவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்பில் இருந்து வெளிநாட்டிலிருந்தபடியே இலங்கையில் குற்றச் செயல்களை இயக்கியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இருவர் பெரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களாகவும், ஏனைய மூவரும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர், கடந்த 22 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 19 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உட்பட 21 சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்கள் தற்போது விசேட பிரிவுகளின் கீழ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
2024, 2025 மற்றும் 2026 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டும், சர்வதேச சிவப்பு எச்சரிக்கை மூலம் 32 சந்தேகநபர்களும், பல்வேறு நாடுகளுடன் இணைந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட மேலும் 70 சந்தேகநபர்களும் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் குற்றங்களைச் செய்துவிட்டு வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து கொண்டு குற்றச் செயல்களை இயக்கும் எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்றும், எஞ்சியுள்ள 89 பேரையும் விரைவில் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
