அரச மருத்துவமனையில் சிசு பலியான சம்பவம்; தனியார் வைத்தியசாலை சென்ற மருத்துவர் பணி இடைநீக்கம்!


திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்தியர் ஒருவர் மற்றும் அதே வைத்தியசாலையின் சிரேஷ்ட விடுதி பெண் வைத்தியர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்படுவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி அந்த வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரசவத்தின் போது சிசு மரணம் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விசாரணை அறிக்கையின்படி, பிரசவத்தின் போது ஏற்பட்ட அவசர நிலை குறித்து இரண்டு வைத்தியர்களையும் பிரசவ அறைக்கு வருமாறு சிரேஷ்ட விடுதி பெண் வைத்தியர் பல முறை (6 தடவைகள்) தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட போதிலும் அவர்கள் வரவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சம்பந்தப்பட்ட இரு வைத்தியர்களும் அந்த நேரத்தில் தனியார் வைத்தியசாலையில் சிசேரியன் அறுவைச் சிகிச்சையில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில், கடமை நேரத்தில் சேவையை புறக்கணித்து தனியார் மருத்துவ சேவையில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர்களின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் விரிவான ஒழுக்காற்று விசாரணையை சுகாதார அமைச்சு ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.