தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் ஆபத்தான முறையில் பயணித்த யுவதிகள் கைது!
தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் ஆபத்தான முறையில் பயணித்த யுவதிகள் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நான்கு பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று இளம் பெண்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பு விதிகளை மீறி பயணித்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, புத்தள பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
வைரலான காணொளியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மோட்டார் சைக்கிளை செலுத்திய பெண், அதில் பயணித்த இருவர் மற்றும் வாகனத்தின் உரிமையாளர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் கொலம்பகே ஆர, ஹிதிகிவுல மற்றும் உனவட்டுன பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
விசாரணைகளின் போது, மோட்டார் சைக்கிளை செலுத்திய 23 வயதுடைய யுவதியிடம் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவருக்கு எதிராக சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை, மோட்டார் சைக்கிளில் அதிகப்படியான பயணிகளை ஏற்றிச் சென்றமை, தலைக்கவசம் அணியாமல் பயணித்தமை மற்றும் பொது வீதியில் ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், உரிய அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவருக்கு மோட்டார் சைக்கிளை வழங்கியதாக அதன் உரிமையாளருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் சாரதியும் வாகன உரிமையாளரும் இன்று (11) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
