இன்று முதல் புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம் நடைமுறைக்கு!


இந்த ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கான புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (11) முதல் அமுலுக்கு வருகிறது.

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டண மாற்றத்தை ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னதாக அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி, மின்சாரக் கட்டணங்களை 8% முதல் 14.4% வரை உயர்த்த தீர்மானிக்கப்பட்டது.

எரிபொருள் விலை அதிகரிப்பால் மின் உற்பத்திச் செலவும் உயர்ந்துள்ளதால், திருத்தப்பட்ட மின்சாரச் செலவுக் கணக்கீட்டை ‘நேஷனல் சிஸ்டம் ஆப்பரேட்டர்’ நிறுவனம் கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது.

இந்நிலையில், மின்சாரக் கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு 15 பில்லியன் ரூபா மானியத்தை வழங்க எழுத்துமூலமாக இணக்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, நாட்டின் 95 சதவீத மின் நுகர்வோருக்கு இந்தக் கட்டண உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வீட்டு பயன்பாட்டில் மாதத்திற்கு 0 முதல் 180 அலகுகள் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு எந்தவித கட்டண உயர்வும் இல்லை.

ஆனால், 180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கான கட்டணங்களில் உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

  • 210 அலகுகள் பயன்படுத்துவோரின் கட்டணம் ரூ. 9,570 இலிருந்து ரூ. 11,330 ஆக உயர்கிறது.
  • 240 அலகுகள் பயன்படுத்துவோரின் கட்டணம் ரூ. 12,120 இலிருந்து ரூ. 14,330 ஆக அதிகரிக்கிறது.
  • 270 அலகுகள் பயன்படுத்துவோருக்கு ரூ. 2,660 வரை கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்.
  • 300 அலகுகள் பயன்படுத்துவோரின் மாதாந்திர கட்டணம் ரூ. 3,110 வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.