பல முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!


நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையால் பல முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது 9 பிரதான நீர்த்தேக்கங்களும், 5 நடுத்தர நீர்த்தேக்கங்களும் நிரம்பும் நிலையை எட்டியுள்ளன என நீர்ப்பாசனப் பணிப்பாளரும் நீர் முகாமைத்துவ பொறியியலாளருமான எச்.எம்.டி.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் லுனுகம்வெஹேர, மொனராகலை மாவட்டத்தின் வெஹெரகல, அனுராதபுரத்தின் ராஜாங்கனை மற்றும் குருநாகல் மாவட்டத்தின் தெதுறு ஓயா உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, லுனுகம்வெஹேர நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், வினாடிக்கு 4,000 கன அடிக்கு மேற்பட்ட நீர் கிரிந்தி ஓயாவுக்கு வெளியேற்றப்படுகிறது. அதேபோல், வெஹெரகல நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் மூலம் வினாடிக்கு 1,400 கன அடி நீர் மாணிக்க கங்கைக்கு விடப்படுகின்றது.

மேலும், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான்கதவுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 9,300 கன அடி நீர் கலா ஓயாவிற்கு வெளியேற்றப்படுகின்றது. தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் வழியாகவும் வினாடிக்கு 5,500 கன அடி நீர் ஆற்றிற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இதேவேளை, அலிகொட்டஆர நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில், வினாடிக்கு 500 கன அடிக்கு அதிகமான நீர் கிரிந்தி ஓயாவிற்குள் பாய்ந்து வருகிறது.

இதனால், நீர்த்தேக்கங்களின் கீழ்ப்பகுதிகள் மற்றும் ஆற்றோர தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மழை மற்றும் நீர்வரத்து நிலையைப் பொறுத்து வான்கதவுகள் திறக்கும் அளவு எந்நேரமும் மாற்றப்படக்கூடும் என்பதால், உத்தியோகபூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.