பெருநாள் சந்தையில் கட்டண குறைப்பு செய்து வியாபாரிகளுக்கு புத்தள மேயர் விஷேட சலுகை!
புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, இம்முறையும் புத்தளத்தில் பெருநாள் சந்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாநகர மேயர் பொறியியலாளர் ரின்ஷாட் அஹ்மட் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், போல்ஸ் வீதியில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இம்முறை பெருநாள் சந்தை அநுராதபுரம் வீதிக்கு (பொலிஸ் நிலைய வீதி) மாற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், தற்போதைய உலக பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, பெருநாள் சந்தையில் கடை அமைக்கும் வியாபாரிகளிடம் அறவிடப்படும் கட்டணத்தை குறைத்து அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, புத்தளம் நகரின் பல பகுதிகளில் சிறிய அளவில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகளிடம் தற்போது அறவிடப்படும் கட்டணங்களில் எந்தவித அதிகரிப்பும் செய்யப்படமாட்டாது எனவும் மேயர் உறுதியளித்துள்ளார்.
இந்த நடவடிக்கை சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
