பொருளாதார சவால்களை எதிர்கொள்ள அரச மற்றும் தனியார் துறையினருக்கு வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை அறிமுகப்படுத்த அரசு தீவிர பரிசீலனை!


டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் இறக்குமதி செலவுகள் காரணமாக உருவாகியுள்ள பொருளாதார சவால்களை சமாளிப்பதற்காக, கொரோனா காலத்தைப் போல மீண்டும் “Work From Home” (வீட்டிலிருந்து பணிபுரியும் முறை) நடைமுறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுவோருக்கான வீட்டிலிருந்து பணிபுரியும் முறை விரைவில் நடைமுறைக்கு வரக்கூடும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய சூழ்நிலையில் குறிப்பாக டீசல் உள்ளிட்ட எரிபொருள் பயன்பாட்டை குறைத்து சேமிப்பது அரசாங்கத்தின் அவசர தேவையாக மாறியுள்ளதாகவும் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அண்மைய நாட்களில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ.342.63 ஆகவும், விற்பனை விலை ரூ.354.03 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்த நிலைமை மேலும் மோசமடைந்தால் தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்படும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்த பொருளாதார அழுத்தங்களுக்கு மத்திய கிழக்கு போர் நிலைமைகளும் முக்கிய காரணமாக இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் இறக்குமதி செலவுகள் ஏற்றுமதி வருமானத்தை விட அதிகமாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் எரிபொருள் இறக்குமதிக்காக 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த ஆண்டு வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், வாகன இறக்குமதிக்காக மட்டும் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து கருத்து தெரிவித்த CPC தலைவர் டி.ஜே. ராஜகருணா, ஏப்ரல் மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்காக மட்டும் 522 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“முன்பு மாதாந்திர எரிபொருள் செலவு 100 முதல் 110 மில்லியன் டொலராக இருந்தது. ஆனால் தற்போது அது 500 மில்லியன் டொலரைத் தாண்டியுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தற்போதைக்கு நாட்டில் எரிபொருள் விநியோகம் சீராக நடைபெற்று வருவதாகவும், உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வே முக்கிய சவாலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.