முதல்வர் சீட்டில் மாஸாக அமர்ந்த விஜய்!


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுக் கொண்டார். சென்னை நடைபெற்ற பிரமாண்டமான பதவியேற்பு விழாவில் ஆளுநர் முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணமும் இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துகொண்டார்.

முதலமைச்சர் விஜயுடன் இணைந்து புதிய அமைச்சரவை உறுப்பினர்களாக என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே. பிரபு மற்றும் கீர்த்தனா உள்ளிட்டோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

பதவியேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் முதன்முறையாக சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு பொலிஸாரால் விசேட அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலக வளாகத்திற்குள் சென்ற முதலமைச்சர் விஜய், அதிகாரப்பூர்வ முதலமைச்சர் அறைக்குள் சென்று தனது இருக்கையில் அமர்ந்தார்.

பின்னர், புதிய அரசின் ஆரம்பகட்ட நிர்வாக நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தற்காலிக சபாநாயகர் நியமனம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார். இதன் மூலம் புதிய அரசின் நிர்வாகப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், செயலாளர்கள் மற்றும் அரச அலுவலர்கள் முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், புதிய ஆட்சிக்கான தங்களது ஒத்துழைப்பையும் உறுதியளித்தனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் 17வது சட்டப்பேரவை நாளை காலை 9.30 மணிக்கு கூடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. கருப்பையா தலைமையில் புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படவுள்ளதுடன், பின்னர் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.