பாடசாலையொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதல் : 5 மாணவர்கள் வைத்தியசாலையில்!
எப்பாவலை பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில், அதே பாடசாலையைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் அனைவரும் தொழில்நுட்பப் பிரிவில் கல்வி கற்கும் 12 ஆம் தர மாணவர்கள் எனவும், தாக்குதலை நடத்திய மாணவர் விஞ்ஞானப் பிரிவில் கல்வி பயிலும் 12 ஆம் தர மாணவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு தாக்குதலை நடத்திய மாணவருக்கும், காயமடைந்த மாணவர்களில் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறே இந்தச் சம்பவத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பழிவாங்கும் நோக்கில் மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் குறித்த மாணவரைத் தாக்க முயன்றபோது, அதனைத் தடுக்க முனைந்த மற்ற நான்கு மாணவர்களும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த ஐந்து மாணவர்களும் எப்பாவலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, தாக்குதல் நடத்திய மாணவர் எப்பாவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் எப்பாவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
