எரிபொருள் விலை அதிகரிப்பு! - அசித நிரோஷன எம்.பி. விளக்கம்


உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு மற்றும் சர்வதேச சூழ்நிலைகளின் தாக்கம் காரணமாகவே உள்நாட்டில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய எரிபொருள் விலை அதிகரிப்பு அரசின் நிர்வாகத் தவறால் ஏற்பட்டதல்ல என்றும், சர்வதேச காரணிகளின் விளைவாகவே இந்த நிலை உருவாகியுள்ளதாகவும் கூறினார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உலக எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலைகள் உயர்வதற்கு வழிவகுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சூழ்நிலை இலங்கையை மட்டுமன்றி இந்தியா, வியட்நாம், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளையும் பாதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர் நாட்டை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை தற்போதைய அரசு முன்னெடுத்து வருவதாகவும், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் மற்றும் நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எரிபொருள் விலை உயர்வு ஏற்பட்டுள்ள போதிலும், அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு மானியங்களை மக்களுக்கு வழங்கி வருவதாக அசித நிரோஷன மேலும் குறிப்பிட்டார்.