மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய 5 அதிநவீன இயந்திரங்கள் நாட்டுக்கு!
நாட்டில் மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கும், சிகிச்சைக்குப் பின்னரான பராமரிப்பை மேம்படுத்துவதற்கும், வைத்தியசாலைகளில் நிலவும் நீண்டகால காத்திருப்புப் பட்டியலைக் குறைப்பதற்கும் 5 அதிநவீன மேமோகிராபி இயந்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுமக்களுக்கு மேலும் திறனான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பெண்களிடையே அதிகளவில் காணப்படும் மார்பகப் புற்றுநோய் மற்றும் அசாதாரண கட்டிகளைத் துல்லியமாகக் கண்டறிவதற்காக, தலா 153 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 அதிநவீன இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன. இவை கொழும்பு தேசிய வைத்தியசாலை, கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை, அநுராதபுரம் போதனா வைத்தியசாலை மற்றும் அபேக்ஷா வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின் மொத்த பெறுமதி 765 மில்லியன் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நிதியுதவியை சுகாதார அமைப்புகள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன வழங்கியுள்ளன.
அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளுக்கு இரண்டு பயன்படுத்தப்பட்ட மார்பகப் பரிசோதனை இயந்திரங்களையும் வழங்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது நாட்டின் அரச வைத்தியசாலைகளில் 16 மேமோகிராபி இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவை கொழும்பு, காலி, கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, கல்முனை, குருநாகல், அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, இரத்தினபுரி, ராகம, பேராதெனிய மற்றும் களுபோவில உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முக்கிய வைத்தியசாலைகளில் சேவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
