தேசபந்து தென்னகோனுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!


முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்க்கப்படுவதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த “கோட்டா கோ கம” போராட்டக் களத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் சந்தேகநபராக தேசபந்து தென்னகோனை பெயரிடுமாறு சட்ட மாஅதிபர் அனுப்பியிருந்த கடிதத்தை செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நீதியரசர்கள் முன்னிலையில் ஆஜரான பிரதி மன்றாடியார் நாயகம் சுஹர்ஷி ஹேரத், தேசபந்து தென்னகோனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ள தகவலை நீதிமன்றத்தில் அறிவித்தார்.

இதனையடுத்து, குறித்த மனு தொடர்பான மேலதிக விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதிவரை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.