அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, நேற்று யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, வழக்கை எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெல்லிப்பழை மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவு மருத்துவர் தொடர்பாக சமூக ஊடகங்களில் அவதூறான தகவல்களை பரப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இரு மருத்துவர்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கின் போது, தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை மருத்துவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸின் வழிகாட்டலில் சட்டத்தரணி கனகலிங்கம் கிஷோபனா ஆஜராகியிருந்தார்.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சார்பில் சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் முன்னிலையாகியிருந்தார்.
