வெசாக் தினத்தை முன்னிட்டு 61 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!
புனித வெசாக் தினத்தை முன்னிட்டு, அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், 61 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் 33 கைதிகள் வெசாக் தினமான இன்று சிறைச்சாலைகளிலிருந்து உத்தியோகபூர்வமாக விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு நேற்று மாலை முதல் அமுலுக்கு வந்துள்ளதுடன், எதிர்வரும் ஜூன் மாதம் 01ஆம் திகதி திங்கட்கிழமை வரை நடைமுறையில் இருக்கும் என மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பெமரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த உத்தரவை மீறும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொதுமக்கள் இது தொடர்பான விதிமீறல்களை அவதானித்தால் 1913 என்ற விசேட தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது oicoptroom@excise.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ முறைப்பாடு செய்யலாம் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி