இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்ற ரூ.3 கோடி மதிப்பிலான வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!


தமிழகத்தின் மண்டபம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயற்சிக்கப்பட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 8.46 லட்சம் வலி நிவாரணி மாத்திரை அட்டைகள் இந்திய கடலோர காவல் படையினரால் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மண்டபம் அருகிலுள்ள சீனியப்பா தர்கா தெற்கு கடற்கரை பகுதியில் நேற்று (25) மாலை இந்த கடத்தல் முயற்சி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு படகின் மூலம் சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படவுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்திய கடலோர காவல் படையினர் ஹோவர்கிராப்ட் ரோந்து கப்பலின் உதவியுடன் மண்டபம், வேதாளை மற்றும் சீனியப்பன் தர்கா கடற்கரை பகுதிகளில் விசேட ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஒரு சரக்கு வாகனத்திலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் படகில் பெட்டிகள் ஏற்றப்பட்டதை அவதானித்த கடலோர காவல் படையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாதுகாப்பு அதிகாரிகள் அணுகியதை தொடர்ந்து, படகில் இருந்த இருவர் படகுடன் கடல் வழியாக தப்பிச் சென்றதுடன், கரையில் இருந்தவர்கள் பெட்டிகளை அங்கேயே வீசிவிட்டு சரக்கு வாகனத்துடன் தப்பியோடியுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்தில் கைவிடப்பட்டிருந்த 12 பெட்டிகளை கைப்பற்றிய கடலோர காவல் படையினர் அவற்றை மண்டபம் கடலோர காவல் முகாமிற்கு கொண்டு சென்று சோதனை செய்துள்ளனர்.

அந்த சோதனையில், சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 8.46 லட்சம் வலி நிவாரணி மாத்திரை அட்டைகள் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வகை வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கையில் கொக்கெய்ன், ஹெரோயின் மற்றும் மெத்தாம்பெட்டமின் போன்ற போதைப்பொருட்களுடன் கலந்து பயன்படுத்தப்படுவதாகவும், அதனால் இம்மாத்திரைகள் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அதிகளவில் கடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகள் மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், தப்பியோடிய மர்ம நபர்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் தொடர்பில் மண்டபம் மரைன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.