எரிபொருள் கியூ.ஆர் முறைமை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்!


நாட்டில் தற்போது அமுலில் உள்ள கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறைமையை உடனடியாக நீக்க அரசாங்கம் எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும், தடையின்றி விநியோகத்தை முன்னெடுக்க தேவையான எரிபொருள் கையிருப்புகள் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் தேவையற்ற நுகர்வை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும், அதிகளவு அந்நியச் செலாவணி வெளியேறுவதைத் தடுக்க கியூ.ஆர் முறைமை ஒரு கட்டுப்பாட்டு நடைமுறையாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் உருவாகுவதையும், பொதுமக்கள் மத்தியில் பீதியூட்டும் கொள்வனவுகளைத் தடுப்பதிலும் இந்த முறைமை பயனுள்ளதாக இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் எரிபொருள் கோட்டாக்களை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படலாம் என்றாலும், கியூ.ஆர் முறைமையை முழுமையாக நீக்க திட்டமில்லை என அவர் தெளிவுபடுத்தினார்.

இதற்கிடையில், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கியூ.ஆர் குறியீடுகள் சரிவரச் சரிபார்க்கப்படாமல் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரதி அமைச்சர் அர்க்கம் இலியாஸ் விளக்கமளித்தார்.

எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விநியோகிக்கப்பட்ட எரிபொருள் அளவு மற்றும் கியூ.ஆர் முறைமையில் பதிவான அளவு ஆகியவற்றுக்கு இடையில் பாரிய வேறுபாடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.