இலங்கையில் தற்சமயம் அமலில் உள்ள அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு!
இலங்கையில் தற்போது அமலில் உள்ள அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் பொதுப் பாதுகாப்பு, அமைதி மற்றும் புயலுக்குப் பிந்தைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் தடையின்றி இடம்பெறுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமாநாயக்கவின் கையொப்பத்துடன், 2026 மே 28 ஆம் திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசமைப்பு மற்றும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களின் அடிப்படையில், கீழ்க்கண்ட 15 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன:
- மின்சார விநியோக சேவைகள்
- பெற்றோலியப் பொருட்கள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் விநியோக சேவைகள்
- வைத்தியசாலைகள், பராமரிப்பு நிலையங்கள் மற்றும் மருந்தகங்களின் நோயாளர் பராமரிப்பு சேவைகள்
- பயணிகள் மற்றும் பொருட்களுக்கான பொதுப் போக்குவரத்து சேவைகள்
- வீதிகள், பாலங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் புகையிரத பாதைகள் பராமரிப்பு சேவைகள்
- நீர் வழங்கல் மற்றும் வடிகால் சேவைகள்
- உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோக சேவைகள்
- மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் களமட்ட அதிகாரிகளின் சேவைகள்
- அவசர நோயாளர் காவு வண்டி சேவைகள்
- இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அனைத்து அரச வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவைகள்
- உள்ளூராட்சி மன்றங்களின் நீர், மின்சாரம், தீயணைப்பு, கழிவகற்றல் மற்றும் துப்புரவு சேவைகள்
- நீர்ப்பாசன சேவைகள்
- தொலைபேசி, தொலைத்தொடர்பு மற்றும் ஊடகத் துறை சேவைகள்
- தாழ்நிலங்களை நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள்
- விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதி சேவைகள்
அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் இச்சேவைகள் தடையின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்தும் நோக்கில், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
