கைக்கடிகார பற்றரியை விழுங்கிய 7 வயது சிறுவன் பலி!
கைக்கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் சிறிய பட்டன் பற்றரியை தவறுதலாக விழுங்கிய ஏழு வயது சிறுவன் ஒருவர், காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெலிகம, படவல பகுதியைச் சேர்ந்த 07 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தபோது கைக்கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் பட்டன் பற்றரியை விழுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து பெற்றோர் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எக்ஸ்ரே பரிசோதனையின் பின்னர், முதலில் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு சிறுவனின் வயிற்றில் இருந்த பற்றரி அகற்றப்பட்டதுடன், இரண்டு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
எனினும், பின்னர் பாடசாலைக்குச் செல்லத் தயாரானபோது சிறுவனுக்கு கடுமையான வயிற்றுவலி மற்றும் தலைவலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கிடையிலும் அவர் பாடசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இதன்போது, காலை 8.30 மணியளவில் சிறுவன் பாடசாலையில் இரத்த வாந்தி எடுத்ததாக பெற்றோருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. உடனடியாக மீண்டும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு எண்டோஸ்கோபி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், தீவிர சிகிச்சைப் பிரிவிலும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் பிரேத பரிசோதனையை மேற்கொண்ட சட்ட மருத்துவ அதிகாரி, குடல் பகுதியில் உள்ள முக்கிய நரம்பு பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட உட்புற இரத்தப்போக்கே மரணத்திற்குக் காரணம் என தெரிவித்துள்ளார்.
