நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி ; ஆட்சியை தக்க வைத்தது விஜய் தலைமையிலான தவெக அரசு!
தமிழக சட்டசபையில் இன்று (13) அரசு சார்பில் நம்பிக்கை கோரும் தீர்மானம் ஆளும் கட்சியினரால் முன்மொழியப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.
அதன் பின்னர் எதிர்க்கட்சியினரும் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். தொடர்ந்து மீண்டும் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், அரசின் நிலைப்பாடுகளை விளக்கினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு, சட்டசபையின் அனைத்து நுழைவு வாயில்களையும் மூட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உத்தரவிட்டார்.
பின்னர், சட்டசபை ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவாக உறுப்பினர்களை எழுந்து நிற்கச் செய்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
முதல் பிரிவில் 30 எம்.எல்.ஏ.க்களும், இரண்டாவது பிரிவில் 42 எம்.எல்.ஏ.க்களும், மூன்றாவது பிரிவில் 46 எம்.எல்.ஏ.க்களும் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
நான்காவது பிரிவில், எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் அரசுக்கு ஆதரவு அளித்தனர். தொடர்ந்து ஐந்தாவது மற்றும் ஆறாவது பிரிவுகளிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மொத்தமாக 144 உறுப்பினர்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்ததையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.
இதன்மூலம் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கிறது.
சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவை, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு அறிவித்துள்ளார்.
