515 பட்டதாரிகளுக்கு செவிலியர் உத்தியோகத்தர் நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!


நாட்டின் இலவச சுகாதார சேவையின் மனித வளத் தரத்தையும் செயல்திறனையும் மேம்படுத்தும் நோக்கில், 515 பட்டதாரிகளுக்கு செவிலியர் உத்தியோகத்தர் நியமனக் கடிதங்கள் நேற்று (29) சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வு நேற்று (29) இலங்கை மன்ற வளாகத்தில் நடைபெற்றது.

அரச பல்கலைக்கழகங்களில் செவிலியர் பட்டப்படிப்பை நிறைவு செய்து, நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 31 அரச வைத்தியசாலைகளில் ஆறு மாத கால ஒழுங்கமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்களுக்கே தரம் III செவிலியர் உத்தியோகத்தர்களாக இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் தேசிய, போதனா மற்றும் மாவட்ட பொது வைத்தியசாலைகளில் நிலவும் வெற்றிடங்களின் அடிப்படையில் இவர்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, 2025 முதல் 2029 வரையிலான ஐந்தாண்டு காலப்பகுதியில் செவிலியர் சேவைக்கு புதிதாக 13,600 பேரை இணைத்துக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இன்று வழங்கப்பட்ட 515 நியமனங்களுடன் குறித்த இலக்கில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் வழங்கப்படவுள்ள மேலும் 2,867 நியமனங்களுடன் இந்த ஆண்டின் இறுதிக்குள் இலக்கின் 50 வீதத்தை எட்ட எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.