மகனுடன் சேர்ந்து கணவர் மற்றும் அவரின் 2வது மனைவி உட்பட நால்வருக்கு முதல் மனைவி நிகழ்த்திய கொடூரம்!
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில், கணவர் உள்ளிட்ட நான்கு பேரைக் கொலை செய்துவிட்டு மறுநாள் துயரம் நடித்ததாகக் கூறப்படும் பெண்ணும், அவரது மகன் மற்றும் மகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஜ்மீர் அருகிலுள்ள ஸ்ரீராம்புரா கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையாகியிருந்தார். பின்னர், 2019ஆம் ஆண்டு தனது முதல் மனைவியின் எதிர்ப்பை மீறி மற்றொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தன்று, முன்னாள் பஞ்சாயத்து தலைவர், அவரது இரண்டாவது மனைவி, தாயார் மற்றும் உறவினர் ஒருவர் ஆகிய நான்கு பேர், வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் எரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், முதல் மனைவியின் வீட்டில் இரத்தக் கறைகளை கண்டறிந்ததையடுத்து அவரது மகனை விசாரித்தனர். இதன்போது, குடும்பத் தகராறு மற்றும் நீண்டகால முரண்பாடுகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதற்கட்ட விசாரணைகளின் படி, தந்தையால் குடும்பத்தினர் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அவர் உறங்கிய பின்னர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர், வீட்டிலிருந்த மற்ற மூவரும் கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலைக்குப் பின்னர், நான்கு பேரின் உடல்களும் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தடயவியல் ஆய்வுகளின் அடிப்படையில், உயிரிழந்தவர்கள் வாகனத்திற்குள் அல்லாமல் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் முதல் மனைவி, அவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
