தலை துண்டிக்கப்பட்டு ஒருவர் படுகொலை! அம்பலாந்தோட்டையில் சம்பவம்


அம்பலாந்தோட்டை, மாமடல தெற்கு, போகுடுயாய பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் கடுமையாக காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர் உயிரிழந்த நபரின் மனைவியின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, மூவர் கொண்ட குழுவொன்று குறித்த நபரின் வீட்டிற்கு சென்று தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்குப் பின்னர், உயிரிழந்த நபரின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மாமடல சந்தியில் உள்ள சிலை அருகே வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

உயிரிழந்த நபர் கடந்த ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி அம்பலாந்தோட்டை அலேகொட மேற்கு பகுதியில் இடம்பெற்ற முக்கொலைச் சம்பவத்தின் சந்தேகநபராக இருந்ததாகவும், பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர் கடந்த மார்ச் 30ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பழிவாங்கல் காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், சம்பவ இடத்திலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கி ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.