நாட்டில் 203 பேருக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுவரை 203 பேர் மூளைக்காய்ச்சல் (Meningitis / Encephalitis) நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தெனியாய, தியத்தலாவ, ரிபில்லகஸ்கட மற்றும் கண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இந்த நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், நோய் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான சுகாதார நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூளைக்காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாக கடுமையான காய்ச்சல், தலைவலி, கழுத்து இறுக்கம், வாந்தி, ஒளி எரிச்சல், மயக்கம், வலிப்பு மற்றும் உடல் பலவீனம் என்பன காணப்படுகின்றன.
குழந்தைகளில் தொடர்ந்து அழுதல், உணவு மறுத்தல், அதிக தூக்கம் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படலாம் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
