விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைப்பதில் இழுபறி நிலை : இராஜினாமா செய்ய தயாராகும் தவெக 107 சட்டமன்ற உறுப்பினர்கள்!
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியமைப்பு தொடர்பான இழுபறி நிலை தொடர்ந்து வரும் நிலையில், திமுக அல்லது அதிமுக ஆகிய கட்சிகளில் ஏதேனும் ஒன்று ஆட்சி அமைக்க முயன்றால், தங்களது 107 சட்டமன்ற உறுப்பினர்களும் மொத்தமாக இராஜினாமா செய்வார்கள் என தமிழக வெற்றி கழகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டமன்றத்தில், 108 இடங்களை கைப்பற்றி தமிழக வெற்றி கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவுக்கு வராததால் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்த போதிலும், ஆட்சியமைக்க தேவையான 118 இடங்களைக் கட்சி எட்டவில்லை. இதனால் சுயேச்சை உறுப்பினர்களும் சிறிய கட்சிகளும் முக்கிய தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளனர்.
தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க திமுக மற்றும் அதிமுக இடையே மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக வெளியான தகவல்கள், அரசியல் நிச்சயமற்ற நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தமிழக வெற்றி கழகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு வழங்கியிருப்பது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையையும் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் “இந்தியா” கூட்டணி முற்றாக சிதைந்துவிட்டதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், 47 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக மீதும் அரசியல் கவனம் திரும்பியுள்ளது.
இந்நிலையில், திமுக அல்லது அதிமுக கூட்டணியாக இணைந்து ஆட்சியை பிடிக்க முயற்சித்தால், தமிழக வெற்றி கழகத்தின் 107 உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் இராஜினாமா செய்யக்கூடும் என இந்திய அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு நிகழ்ந்தால், இரு முக்கிய கட்சிகளுக்கும் மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும் சூழல் உருவாகலாம் என்பதால், அவர்கள் ஆட்சியமைக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம் எந்தக் கட்சிக்கும் ஆட்சியை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டால், ஆளுநர் ஜனாதிபதி ஆட்சியை பரிந்துரைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அரசியல் சாசனத்தின் 356 ஆவது பிரிவின் கீழ், ஆளுநரின் பரிந்துரைக்கு அமைவாக தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தால், தமிழக சட்டசபை தற்காலிகமாக முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
