மதத் தலைவர்களின் எதிர்ப்பால் LGBTQI சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் திட்டத்திலிருந்து பின்வாங்கிய அரசாங்கம்!


மாற்றுப்பாலின மற்றும் பால்புதுமையின (LGBTQI) சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு வரவேற்கும் முயற்சிக்கு வழங்கப்பட்டிருந்த அரசாங்க ஆதரவு மீளப் பெறப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபை மற்றும் பால்புதுமையின சமூக உரிமைகள் அமைப்பான ஈக்குவல் கிரவுண்ட் இணைந்து கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இந்த முயற்சியை தொடங்கியிருந்தன.

இந்தத் திட்டம் நாட்டின் சுற்றுலா சந்தைகளை விரிவுபடுத்துவதற்கும், இலங்கையை அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய இடமாக மாற்றுவதற்கும் முக்கிய பங்காற்றும் என அப்போது அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கிறிஸ்தவ மற்றும் பௌத்த மதத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க இந்த முயற்சிக்கான அரசாங்க ஆதரவை இரத்து செய்ததாக அறிவித்தார்.

இதனிடையே, ஈக்குவல் கிரவுண்ட் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஸன்னா பிளாமர்-கால்டெரா அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆதரவு திரும்பப் பெறப்பட்டாலும் முயற்சியில் எந்த மாற்றமும் ஏற்படாது என தெரிவித்துள்ளார்.

மேலும், சுற்றுலாத்துறையினருடன் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருவதாகவும், இம்முயற்சி நாட்டின் பொருளாதாரத்திற்கும் சுற்றுலாத்துறைக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.