நாட்டில் தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படையினர் தொடர்பில் வெளியான தகவல்!
இலங்கையில் பாதுகாப்பு கண்காணிப்பின் கீழ் தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த 236 பேர் செவ்வாய்க்கிழமை (14) விசேட ஏற்பாடுகளின் கீழ் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்களில், IRIS Dena கப்பல் இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் அமெரிக்க நீர்மூழ்கித் தாக்குதலுக்கு உள்ளானபோது மீட்கப்பட்ட 32 ஈரானிய கடற்படை வீரர்களும், IRIS Bushehr கப்பலில் இருந்த 204 மாலுமிகளும் அடங்குகின்றனர்.
காயமடைந்த நிலையில் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட இவர்கள், பின்னர் நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், Meraj Airlines நிறுவனத்திற்குச் சொந்தமான ‘Iran-09’ என்ற விசேட விமானத்தின் மூலம் இவர்கள் நேற்று மாலை தாயகத்திற்குப் புறப்பட்டனர். குறித்த விமானம் மாலை சுமார் 4.00 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இலங்கை விமானப்படைத் தளத்தை வந்தடைந்தது.
பின்னர், வெலிசறை தடுப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 204 பேரும், கொக்கல தடுப்பு மையத்தில் இருந்த 32 பேரும் விமானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதையடுத்து, விசேட விமானம் இரவு 8.35 மணியளவில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்டு, ஈரானில் பெயர் வெளியிடப்படாத விமான நிலையம் நோக்கிப் பயணித்தது.
இந்த நடவடிக்கை சர்வதேச மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
