மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலை அதிகரிப்பு!


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்று (23) மேலும் உயர்வைச் சந்தித்துள்ளன.

உலகளாவிய சந்தை நிலவரப்படி WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 93.40 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. அதேவேளை, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 102.3 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இதேவேளை, இயற்கை எரிவாயு விலையும் உயர்வை பதிவு செய்து 2.722 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கில் தொடரும் அசாதாரண நிலை மற்றும் விநியோக வலையமைப்பில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்துகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உலகளாவிய விநியோகத்திற்கு தாக்கம் ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த விலை உயர்வு இறக்குமதி நாடுகளின் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும், போக்குவரத்து செலவுகள் மற்றும் மின் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பதால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.