அரச அனுசரணையுடன் தம்புள்ளையில் ஆரம்பமான “ஏஹிபஸ்ஸிகோ” அமைதி நடைப்பயணம்!


சர்வதேச அளவில் கவனம் பெற்ற “அமைதிக்கான நடை பயணம்” அரசின் அனுசரணையுடன் இன்று (22) தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது.

இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த நடைபயணம், எதிர்வரும் ஏப்ரல் 28 வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வொஷிங்டன் வரை, 10 மாநிலங்களை கடந்து 110 நாட்கள் நீடித்த அமைதி நடைபயணத்தை 200க்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் மேற்கொண்டனர். அந்த பயணம் உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது.

அந்த முயற்சியைத் தொடர்ந்து, தற்போது இலங்கையில் “ஏஹிபஸ்ஸிகோ” அமைதி நடைபயணம் என்ற பெயரில் அரசின் ஆதரவுடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த பன்னாகர தேரர் தலைமையிலான பௌத்த தேரர்கள் நேற்று இலங்கை வந்தடைந்தனர். இந்த நடைபயணத்தில் “ஆலோகா” எனப்படும் ஒரு நாயும் தேரர்களுடன் இணைந்து பயணிக்கிறது என்பது சிறப்பம்சமாகும்.

இன்றைய தினத்தில் இந்த நடைபயணம் மாத்தளை அலுவிஹாரை வரை முன்னெடுக்கப்படவுள்ளது.