அதிசய சிறுவனைக் காண செல்லும் மக்கள்!


இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில், மூன்று வயது சிறுவன் ஒருவர் தனது முன்ஜென்ம நினைவுகளைப் பகிர்ந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

லக்கிம்பூர் மாவட்டத்தின் மைலானி பகுதியில் வசிக்கும் சிவகுமார் – ராம்பெட்டி தம்பதியினருக்கு 2014 ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘ஜீதன்’ என்று பெயரிடப்பட்டது.

2017ஆம் ஆண்டு, ஜீதன் மூன்று வயதானபோது, அவன் தனது மழலைப் பேச்சில் வினோதமான தகவல்களை கூறத் தொடங்கினான். தனது வீடு ‘போலாப்பூர்’ கிராமத்தில் இருப்பதாகவும், தனது தந்தையின் பெயர் ‘விதேசி’ என்றும் அவன் கூறியதுடன், அங்கு செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினான்.

முதலில் இதை பெற்றோர் சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும், சிறுவன் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால், அவனை போலாப்பூர் கிராமத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்றவுடன், விதேசி என்பவரை பார்த்ததும், “இவர்தான் என் அப்பா” என்று கூறி ஓடி அணைத்துக்கொண்டான். மேலும், விதேசியின் மனைவி வசந்தியைப் பார்த்து “இவள் தான் என் அம்மா” என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினான்.

அதுமட்டுமல்லாமல், அந்த வீட்டில் உள்ள பொருட்களை சரியாக அடையாளம் காட்டியதுடன், அவை எங்கு வைக்கப்பட்டிருந்தன என்பதையும் துல்லியமாக கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், விதேசியின் மகன் திலீப் (30) 2012 மே 17ஆம் தேதி பெங்களூருவில் கடலில் குளிக்கச் சென்றபோது மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. தூரம் காரணமாக, அவரது உடல் அங்கேயே தகனம் செய்யப்பட்டது. திலீப் உயிரிழந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகே ஜீதன் பிறந்துள்ளான்.

இந்த சம்பவம் குறித்து இரு குடும்பங்களும், கிராம மக்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்தச் சிறுவனை காண அண்டை கிராமங்களிலிருந்தும் மக்கள் திரண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.