தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக இறங்கிய கட்சித் தலைவர்கள்! நாளை நடைபெறவுள்ள வாக்குப் பதிவு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
இறுதி நாளில் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கடைசிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை சோழிங்கநல்லூர் தொகுதியில் தொடங்கினார்.
தவெக தலைவர் விஜய், சென்னை நந்தனம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை கடுமையாக விமர்சித்த அவர், தமிழக மக்கள் தமக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தாம் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு, தனது வெற்றி தேசிய இனத்தின் வெற்றியாக இருக்கும் எனக் கூறி மக்களின் ஆதரவை நாடினார்.
இதேவேளை, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழகத்தில் இரண்டு நாட்கள் பிரசாரம் மேற்கொண்டு, சாத்தூர் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளைச் சேர்ந்த பிற தலைவர்களும் மாநிலம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் தங்களது இறுதிக்கட்ட பிரசாரத்தை முன்னெடுத்தனர்.
