பலரின் கண் முன்னே வீதியில் வைத்து பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!


குருணாகல் மாவட்டத்தின் கொகரெல்ல பகுதியில் பெண் ஒருவரை வீதியில் வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய காணொளியைத் தொடர்ந்து ஒன்பது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை (16) மெடலந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. பொதுவீதி ஒன்றில் வைத்து ஒரு குழுவினர் பெண்ணை தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, அது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவாகியிருந்த சந்தேகநபர்களை கைது செய்வதற்காக இலங்கை பொலிஸ் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் பின்னர், கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) ஒன்பது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தற்போது கொகரெல்ல பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய வாக்குமூலத்தில், “நாங்கள் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம். நிகழ்ச்சி முடிந்த பிறகு வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். வழியில் சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என எண்ணி சுமார் ஒன்றரை மணி நேரம் அங்கே தங்கியிருந்தோம். பின்னர் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது திடீரென எங்கள் வாகனத்தின் முன் ஒருவர் வந்து நின்றார்” என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, “வாகனம் வருவதை அவர் பார்த்திருந்தும் ஓரமாக செல்லவில்லை. காரின் முன்பாக நின்றுகொண்டிருந்த நிலையில் என் கணவர் வாகனத்தை நிறுத்திய உடனே, திடீரென ஒரு குழுவினர் இரும்புக் கம்பிகள் மற்றும் வாள்களுடன் வந்து எங்களை தாக்கினர். எங்களுக்கு எந்தவித வாய்ப்பும் அளிக்காமல் ஈவிரக்கமின்றி தாக்குதல் நடத்தப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

ஆரம்ப கட்ட விசாரணைகளின் படி, இந்தத் தாக்குதல் உறவினர்களுக்கிடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் சம்பவத்தின் பின்னணி மற்றும் முழு காரணத்தை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தாக்குதலில் காயமடைந்த பெண் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தற்போது அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பொதுவெளியில் இத்தகைய வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.