யாழில் அரங்கேறிய கொடூரம் - புதுவருட கொண்டாட்டத்திற்காக வந்த இளைஞன் படுகொலை! இருவர் படுகாயம்


புதுவருடக் கொண்டாட்டத்திற்காக கொழும்பிலிருந்து தாயகத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் உயிரிழந்ததுடன், மற்றொரு இளைஞர் கத்திக்குத்தால் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொல்புரம், சித்தம்பி கோவிலடி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய கோணேஸ்வரன் மயூரன் உயிரிழந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 26 வயதுடைய ரஜீவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் விசாரணைகளில் தெரியவருவதாவது, ஒரே ஊரைச் சேர்ந்த இவ்விரு தரப்பினருக்கிடையில் 2021ஆம் ஆண்டிலிருந்து முரண்பாடு நிலவி வந்துள்ளது. இந்நிலையில், கொழும்பில் வேலை செய்து வந்த உயிரிழந்த இளைஞர் புதுவருடத்தை முன்னிட்டு வீட்டிற்கு வந்தபோது மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதன் பின்னர், இரு தரப்பினரிலும் சேர்ந்த நால்வருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் தாக்கியதால் மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் காயமடைந்த நபர் ‘நக்கிள்ஸ்’ (கையில் போட்டு அடிக்கப் பயன்படும் இரும்பு ஆயுதம்) பயன்படுத்தி நெஞ்சில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உயிரிழப்பு சம்பவ இடத்திலேயே ஏற்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும், வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.