தற்போதைய மாதாந்த எரிபொருள் விலை திருத்த முறைக்கு மாற்றாக, உலக சந்தை அடிப்படையில் வாராந்த விலை நிர்ணய முறை அறிமுகம்!


இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள மாதாந்த எரிபொருள் விலை திருத்த முறைக்கு பதிலாக, உலக சந்தை நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு வாராந்தம் விலைகளை மாற்றியமைக்கும் புதிய பொறிமுறையை அறிமுகப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், இது எதிர்வரும் மே மாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய நடைமுறையின் கீழ், உலக சந்தையில் எரிபொருள் விலைகள் குறையும் பட்சத்தில் அதன் நன்மையை வாராந்த அடிப்படையில் மக்களுக்கு வழங்க அரசு எதிர்பார்க்கிறது. அதேவேளை, உலக சந்தையில் விலைகள் அதிகரிக்கும் போது, உள்நாட்டிலும் அதற்கேற்ப விலைகள் உயர்த்தப்படும்.

மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக எண்ணெய் சந்தையில் காணப்படும் நிலையற்ற தன்மையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனுடன் தொடர்பாக, இலங்கைக்கான 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை விடுவிப்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த வியாழக்கிழமை பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எனினும், நலிவடைந்த மக்களுக்கு உதவிகளை வழங்குவதோடு, எரிபொருள் மற்றும் மின்சார விநியோகச் செலவுகளை ஈடுசெய்யும் வகையில் விலை நிர்ணய முறையை முறையாகப் பின்பற்றுவது அவசியம் என சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது.

நாட்டின் நிதி அபாயங்களை குறைப்பதற்கும், நிதி ஒழுக்கத்தை நிலைநிறுத்துவதற்கும் எரிபொருள் விலைகளை உலக சந்தையுடன் ஒப்பிட்டு தொடர்ச்சியாக கண்காணிப்பது முக்கியம் எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த பின்னணியிலேயே அரசு மேற்கொண்டுள்ள இந்த புதிய நடவடிக்கை அமுலுக்கு வந்த பின்னர், மாதந்தோறும் காத்திருக்க வேண்டிய அவசியமின்றி, உலக சந்தை மாற்றங்கள் வாராந்த அடிப்படையில் நேரடியாக இலங்கையின் எரிபொருள் விலைகளில் பிரதிபலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.